இலங்கை

இஸ்லாத்துக்கெதிரான வீடியோ மூலம் அரசியல் இலாபம் தேடும் நடிகன்

அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க  தனது முகநூலில் முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டும் விதமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இஸ்லாத்துக்கெதிராக , இறைதூதருக்கெதிராக  தஸ்லிமா நஸ்ரின் அல்லது அவரைப்போன்ற ஒரு பெண் பேசுகின்ற வெறுப்பை தூண்டும் பதிவு தான் அது.

சிங்களத்தில் சப் டைட்டில் அழகாக இணைக்கப்பட்டுள்ளது. அவர் பேசும் விடயங்கள் எல்லாம் இதற்கு முன் எத்தனையோ இஸ்லாம் விரோதிகளால் பேசப்பட்ட ஒரேவகை பொய்க்குற்றச்சாட்டுக்களே.

ஏற்கனவே பலர் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்திருப்பினும் இப்போதும் கூட எம்மால் அவற்றுக்கு பதிலளிக்க முடியுமாக இருப்பினும் … அதற்கு முன் நாம் கண்டுகொண்ட அவதானங்களை பகிர்ந்துகொள்வதே முக்கியம்.

நாடு முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு திட்டமிட்ட  முஸ்லிம் வெறுப்பு மற்றும் இஸ்லாமோபோபியா நிலையை அடைந்துள்ள நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக ரஞ்சன் இந்த பதிவை இட்டிருக்கின்றார்.

அந்த பதிவின் கீழ் அனைத்துவகை இனவாதிகள் மற்றும் இனவெறியர்களுக்கும் தம் காழ்ப்புணர்வை கக்க களமமைத்து கொடுத்துள்ளார்.

எந்த கருத்தும் சொல்லாமல் முதலில் பகிர்ந்த நடிகர் மற்றும் அமைச்சர் ரஞ்சன் பின்னர்  கருத்துப்பரிமாறலூடாக உண்மையை அறியும் முயற்சி என்று விபரம் சொல்லியுள்ளார்.

இதன் மூலம் இஸ்லாத்தின் பிம்பத்தை மோசமாக சித்தரிப்பதே நோக்கமென தெளிவாக தெரிகிறது.

அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரது அடிமன வக்கிரம் வெளியான தருணமாக முஸ்லிம்கள் இந்த பதிவை பார்ப்பதும் தவிர்க்க முடியாதது.

சகவாழ்வும் இன ஒற்றுமையும்  எங்கோ இனவெறித்தாக்குதலால்  இடிந்துபோன இஸ்லாமியனின் உடமைக்கு அப்பால் சிதைந்து  சின்னாபின்னமாகி தூரத்தில் தெரிகின்றன.

Please follow and like us: