இலங்கை

அநீதிக்குள்ளானோரின் வீடுகளை தரிசித்து தகவல்களை பரிமாறுவோம்

இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலானது முதல் முஸ்லிம்களுக்கெதிரான கெடுபிடிகளும் வரலாற்றில் இல்லாத அளவு கேவலமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.
இனவாத ஊடகங்களின் கணிசமான பங்கு இந்த மனிதாபினமற்ற பாதுகாப்பு தரப்பின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் பின்னணியாக இருப்பது கண்கூடு.

முஸ்லீம் சமூகம் சிதைந்து போன தன் பிம்பத்தை தானே சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. தனக்கெதிரான சூழ்ச்சிகளை இனங்கண்டு தானே எதிர்த்து நிற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

எனவே இந்த நேரத்தில்  முழு சமூகமும் இயங்கவேண்டியது இன்றியமையாததாகும்.

அர்த்தமில்லா கைதுகளும் ஆங்காங்கே பரவலாக நடக்கும் முஸ்லிம் அடையாளத்துக்கெதிரான அத்துமீறல்களும் ஆவணப்படுத்தப் பட்டு உரியவேளையில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு வெளிநாடுகளில் இருக்கும் மனித நேய ஆர்வலர்கள் உதவ தயாராகி இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் .
எனவே எந்த ஊடகத்திலும் தங்கியிருக்காமல் எமது நிலைமைகளை நாமே எத்தி வைப்போம் என்ற நிலைப்பாட்டுக்கு முழு முஸ்லீம் சமூகமும் வரவேண்டும்.

முதல்கட்டமாக, அநியாயமாக, அர்த்தமில்லாமல் கைது செய்யப்படுவோரின் விடயத்தில் கரிசனை காட்டப்பபடவேண்டும். நமது பகுதிகளில் அவ்வாறான கைதிகளின் வீடுகளுக்கு முழு ஊர்வாசிகளும் விஜயம்செய்வது மனிதாபிமான கண்ணோட்டத்திலும் சரி… மார்க்க கண்ணோட்டத்திலும் சரி முதல்தரமான பணியாகும்.
கைதான அப்பாவிகளின் நிலைமைகளை உறவினரிடம் கேட்டறிவதும் அதை முடிந்தளவு பொதுத்தளத்தில் பகிர்வதும் இந்த ரமழானின் இறுதிப்பத்தில் செய்யும் உயர்வணக்கங்களில் ஒன்றாக அமையும்.

கைதான காரணம்…. குற்றச்சாட்டு குறித்த உண்மைநிலை… விசாரணைகளின் நியாயத் தன்மை… சிறை நிலைமை… சட்ட உதவிகள்…. நீதி மன்ற வழக்கு நிலவரங்கள் என பல பக்கங்களை வெளிக்கொணரும் வேளை அது முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக மட்டுமன்றி தேசத்துக்கான பங்களிப்பாகவும் மாறும் .

அவ்வாறே சாதராண நிகழ்வுகளாக நாம் கடந்து செல்லும் இனவாத அத்துமீறல் செயற்பாடுகளும் எமது அடையாளத்தை ஒழிக்க எடுக்கும் இனவெறி முயற்சிகளும் கூட ஆவணமாக்கப்படல் அவசியம்.
அபாயா கழற்றப்பட்ட சகோதரியின் வீட்டுக்கும் அரபு புத்தகம் வைத்திருந்ததால் கைதானா சகோதரனின் வீட்டுக்கும் முழு ஊர்வாசிகளும் விஜயம் செய்ய வேண்டும்.
அதன் மூலம் ஒவ்வொரு அராஜக நிகழ்வுகளும் – அவை சிறியனவாக இருப்பினும் – ஆவணமாக்கப்பட உதவும்.

இது இன்றைய நிலைமையில் நாம் செய்ய வேண்டிய முக்கிய பணிகளில் முதலாவதும் முதன்மையானதுமாக அடையாளம் கொள்ளக் கூடியது.

எனவே தமது அடையாளத்தையும் தேசியத்தையும் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் இதனை கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

குறுகிய கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால்… சுமக்க முடியாத இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால்… பாரமாகிப்போன பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால்… இந்த பணிகளை எமது இருப்பை பாதுகாக்க ஒன்றிணைந்து மேற்கொள்வோம்.

ஒரு சகோதரனின் சாதராண தேவையை பூர்த்தி செய்ய அவனோடு செல்வது மஸ்ஜிதுன்னபவியில் இஃதிகாப் இருப்பதை விட உயர்வாக கருதும் உன்னத மார்க்கத்தில், அல்லலுறும் அநியாத்துக்கு உள்ளாகும் ஒரு சகோதரனின் விடுதலைக்காக வேண்டி வேலை செய்வது… அதிலும் புனித ரமழானின் இறுதி நாட்களில் வேலை செய்வது எவ்வளவு உயர்வானதாக இருக்கும் என்ற மார்க்கப் பெறுமானத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

“நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும் அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் – அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்”

Please follow and like us: