இலங்கை

அரபுலகில் ஏன் மதத்தின் பெயரால் மக்களைக் கொலை செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள்?

நான் நேற்று கொழும்பு சென்று திரும்பும் வழியில் பஸ்ஸில் எனக்கருகாமையில் ஒரு சிங்களப் பெண்மணி அமர்ந்து இருந்தாள்.

நீண்ட நேரம் நிறையவே  நாட்டு நடப்புகள் பற்றி நானும் அவளும் கதைத்துக் கொண்டு வந்தோம். வானொலியில் செய்தி என்ற பெயரில் சொல்லப்படும் விடயங்களைப் பார்த்து இச்செய்திகளைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை என அவளது வெறுப்பை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

இப்படி ஆரம்பத்தில் என்னோடு மிக நன்றாகத்தான்  அப்பெண்மணி கதைத்துக் கொண்டு வந்தாள்.

பஸ்ஸிலிருந்து இறங்க 30 நிமிடம் இருக்கும் போது திடீரென அந்தப் பெண் ஒரு கேள்வி கேட்டாள்!

நீங்கள்  நீண்டகாலமாக அரபுலகில் தொழில் செய்தீங்க தானே. ஏன் அங்கு மதத்தின் பெயரால் மக்களைக் கொலை செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள்? 250 க்கும் அதிகமானவங்க  கொலை செய்யப்பட்டதற்கு இதுதான் காரணம் அல்லாவா? என்றாள் அந்தப் பெண்.

அப்போது நான் ஒரு நீண்ட பதிலை அந்தப் பெண்மனிக்கு  சொன்னேன்..

“உலகில் எந்த ஒரு மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை. இஸ்லாமும் வன்முறையை ஒருபோதும் போதிக்கவில்லை…

எனக்கு அவ்வளவாக அரபு மொழி தெரியாது. ஆனால் என்னை விட நன்றாக அரபு மொழி தெரிந்தவர்கள் யாரென்றால் இங்கிருந்து அரபு நாடுகளுக்குப் போய் அரபிகளின் வீட்டு குசினியிலும் மலசல கூடத்திலும் சுத்திகரிப்பு வேலை செய்யும் பெளத்த தாய்மார்களும் அக்கா மார்களும் தான்.

கடந்த 50 வருசமா அரபிகளின் வீட்டில் இருக்கும் அவர்களிடம் நீங்கள் இது பற்றிக் கட்டாயம் கேட்க வேண்டும்.

அவர்களால் தான் அரபிகள் தனது பிள்ளைகளுக்கு என்ன படித்துக் கொடுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லலாம்.

அத்துடன் அரபிகள் அடுத்தவர்களைக் கொல்ல வேண்டுமென்று சொல்லிக் கொடுப்பதாயின் உடனடியாக அவ்வரபிகளின் குசினியிலும் மலசல கூடத்திலும் வேலை செய்துவரும் சிங்கள பெளத்த தாய்மார்களை முதலில் நாம் நாட்டுக்கு வரவழைக்க வேண்டும்.

உண்மை என்னவென அவர்களிடம் கேட்டால், அரபிகளில் ஒருவர் கூட நீங்கள் சொன்னது போன்று கொலை செய்யப் படித்துக் கொடுக்கும் கதையை அவர்கள் யாரும் சொல்ல வாய்ப்பில்லை.

அத்துடன் இலங்கையில் SWRD பண்டாரநாயக்காவை வைக் கொலை செய்ததற்காக நாம் பெளத்த மதத்திற்கு குறை கூறவில்லை.

83 கலவரத்தை முன்னின்று செய்ததற்காக நாம் பெளத்த மதத்தை குறை கூறவில்லை

விடுதலை புலிகளின் கொலைகளுக்காக நாம் இந்து, கிறிஸ்தவ மதத்தை குறை கூறவில்லை

யுத்ததிற்குப் பிறகு இராணுவத்தினர் அப்பாவித் தமிழ் மக்களை அழித்த செயற்பாட்டிற்காக இராணுவத்தினரின் பெளத்த மதத்தை குறை கூறவில்லை

அத்துடன் அளுத்கமை, திகன முதல் நீர்கொழும்பு வரையான முஸ்லிம் மக்களின் சொத்துகளை அழித்தமைக்கும் மற்றும் கொள்ளையடித்தமைக்காகவும் பெளத்த மதத்தை யாரும் குறை கூறவில்லை

இவ்வழிவுகள் அனைத்தும் பாதுகாப்புத்துரையினரின் கண்களுக்கு முன்னால் நடந்தமையைக் கண்டும் காணாதது போல் அவர்கள் இருந்ததற்காக பாதுகாப்புப் பிரிவின் மதத்தை குறை கூறவில்லை.

குறித்த குண்டு வெடிப்பை நடாத்திய சகரான் கோதாபாயவின் கூலிப்படையில் உருவாக்கப்பட்டவன் என்பதற்காக யாரும் கோதாபாயவின் மதத்தை குறை கூறவில்லை.

அத்துடன் 2015 இல் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட குண்டுதாரியை மனிதனாக புனருத்தாரணம் செய்ய முயற்சிக்காத அரச மற்றும் உலவுத்துறை அதிகாரிகளின் மதத்தை குறை கூறவில்லை.

அத்துடன் யார், எந்த இடத்தில், எப்போது குண்டு போடப் போகின்றான் என்று துல்லியமாக தெரிந்திருந்த இரகசியப் பொலிசாரின் மதத்தை நம் குறை கூறவில்லை.

இது பற்றி சனாதிபதிக்கு அறிவுறுத்தல் கொடுக்கப் பட்ட நிலையில் அவர் கண்டுகொள்ளாமல் இப்படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தமைக்காக அவருடைய மதத்துடன் கோபிக்கவில்லை.

ஹரின் அமைச்சர் தனது தந்தை குறித்த கோவிலுக்குச் செல்ல வேண்டாம், அங்கு குண்டு வைப்பார்கள் என்று சொன்னதைக் கேட்டு அங்கு போகாமலும் அது பற்றி மக்களுக்கு அறிவூட்டாமல் இருந்தமைக்கும் அவரது மதத்துடன் கோபிக்கவில்லை.

இப்போது நீங்கள் இப்படி இஸ்லாத்துடன் கோபித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு உங்களைத் தூண்டியது ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரமும் நீங்களும் நானும் இவ்வாறு கதைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவர்களது எதிர்பார்ப்புமாகும்.

மேலும் இலங்கையில் காணப்படும் நீதிமன்றங்களில் நாளாந்தம் தனது பிள்ளையைக் கற்பழித்த பெளத்த தகப்பன் பற்றி வழக்குகள் பேசப்படுகின்றன. ஒரு பெளத்தன் இன்னொரு பெளத்தனைக் கொலை செய்தமை பற்றியும் தனது மனைவியைத் துன்புறுத்தியமை பற்றியும் ஏராளமான வழக்குகள் பேசப்படுகின்றன. ஆனால் இதற்காக யாரும் பெளத்த மதத்தில் குறை காணவில்லை.

இலங்கையில் போதைபொருள் வியபாரத்தில் முன்னிற்கும் பெளத்த சிங்கள அரசியல்வாதிகளின் மதத்தில் நாம் குறைகாணவில்லை. இந்த போதை பொருள் வியாபாரிகளைக் காப்பாற்றி அத்தொழிலைத் தொடர்ந்து செய்ய உறுதுணையாக இருக்கும் விசேட மற்றும் விசேடமில்லாத சட்டத்தரணிகளது மதத்தை நாம் யாரும் குறைகாணவில்லை.

இன்று மருந்து வங்க வைத்தியசாலைக்குச் செல்லும் அப்பாவி முஸ்லிம்களின் ஆடையைக்கழட்டச் சொல்லும் பெளத்த வைத்தியர்களின் மதத்தை நாம் குறைகூறவில்லை.

இன்று வீட்டில் சமையலையில் பயன்படுதப்படும் கத்திகளுக்காக சிறைக்கூடங்களில் தவிக்கவிடப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்காக, பொலிசாரினதும் ஏனைய நீதித்துறை அதிகாரிகளினதும் மதத்தை குறை காணவில்லை.

இப்படியிருக்க நீங்கள் என்னோடு இப்படிக் கதைக்கத் தூண்டிய ஊடகங்களைப் பயன்படுத்தி மீண்டும் நாளை தேர்தல் வரும்போது எமக்கிடையே இவ்வாறான சந்தேகங்களை ஏற்படுத்தி மிக இலகுவாக எமது வாக்குகளைப் பறித்துக்கொள்ளப் போகின்றார்கள். தேர்தல் முடியும் வரை இந்த நிலை தொடர்ந்து இருப்பதை அவர்கள் உறுதி செய்துகொள்வார்கள்.

நீங்களும் நானும் மூளையைப் பாவிக்காமல் இப்படி கதைத்துக் கொண்டிருப்பதன் மூலம் அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பை முழுமையாக வெற்றிபெறச் செய்தவர்களாகின்றோம்.”

என்றேன்.

அந்தப் பெண்மணி வாயில் கையை வைத்து மூடியவள் நான் இறங்கும் வரை கையை முகத்திலிருந்து எடுக்கவில்லை.

 

(ஒரு நண்பரின் கொழும்பு – கண்டி பயண அனுபவம்)

Please follow and like us: