ஆசிரியர் கருத்து

அதிகாரிகளின் அறிவீனத்தாலும் பழிவாங்கப்படும் முஸ்லிம்கள்

இலங்கையில் அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் நிலைமையில் படையினருக்கும் போலீசாருக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் அதன் பின் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் சிங்கள இனவெறியர்களின் தாக்குதல்களுக்கும் எதிராக இவ்வாறு இராணுவம் மற்றும் போலீசுக்கு பூரண அதிகாரம் இருந்தாலே உரிய நடவடிக்கைகளை தடையின்றி எடுக்க முடியும் என்பது மறுக்க முடியாததாகும்.

எனினும் இன்றைய நாட்களில் இடம்பெறும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் மக்கள் பார்வைக்கு கேலிக்கூத்தாக மாறி வருகின்றன.

கடந்த 17-05-2019 அன்று பௌத்த சின்னம் அடங்கிய ஆடை அணிந்ததாக ஹசலக பொலிசாரால் அப்துல் ரஹீம் மஸாஹினா, வயது 47, என்ற முஸ்லிம் பெண்மணி கைது செய்யப்பட்டு இம்மாதம் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உண்மையில் அந்த ஆடையில் கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் திசைமாற்றி சக்கரம் (Steering Wheel) ஒன்றின் படமே பொறிக்கப்பட்டுள்ளது. தமது சமய அறிவோ , பொது அறிவோ இல்லாத இந்த போலீஸ் அதிகாரிகளால் இந்த நாட்டின் மதிப்பு கேலிக்குள்ளாவதை உரிய தரப்பினர் கவனத்தில் கொள்வார்களா?

அவ்வாறே ISIS பயங்கரவாதி என்று எவராவது தனது பகையாளியை காட்டிக்கொடுத்தால் எந்த சிந்தனையும் அறிவுமற்ற வகையில் எவரையும் கைது செய்து கம்பி எண்ணவைக்கும் கைங்கர்யத்தையும் பாதுகாப்பு தரப்பு செவ்வனே செய்கிறது.
அதில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எழுதிய, பயங்கரவாதிகளைப்பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் கூறிய சமூக செயற்பாட்டாளர்களை பயங்கரவாத சந்தேகத்தில் கைது செய்வது இலங்கையின் புலனாய்வுத்துறையின் தரத்தை மலினப்படுத்துவதாக அமைந்துள்ளது.

முழு அதிகாரமும் இருந்தும் பாதுகாப்பு தரப்பினர் சிங்கள இனவெறியர்களை முஸ்லிகளுக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபட அனுமதித்தமையும் சர்வதேச மட்டத்தில் விமர்சனத்துக்குள்ளாகி இருப்பதை உரிய தரப்புகள் உணர்ந்துள்ளதாக தெரியவில்லை.

அரபு நூல்கள், சீடீக்கள் , சமையலறை கத்திகள் எல்லாம் பயங்கர ஆயுதங்களாக பறிமுதல் செய்யபப்டுவதும் விசனத்துக்குரிய விடயமே.

எல்லாவற்றுக்கும் மேலால் இவற்றையெல்லாம் வைத்து இனவாத ஊடகங்களுக்கு தீனி போட்டு அவை தாம் விரும்பியவாறு முஸ்லிம்களை பழிவாங்கவும் முடிந்தளவு முஸ்லிம்களுக்கெதிராக பயங்கரவாத கருத்துக்கட்டமைப்பை உருவாக்கவும் இனவெறியர்களை முஸ்லிம்கள் மீது தூண்டிவிடவும் அனுமதித்துள்ளமையும் கண்டிக்கத்தக்க ஆபத்தான நிலைமைகளாகும்.

எல்லாவற்றுக்கும் பொது அறிவும் பிரச்சனைகளை தீர்க்கவேண்டுமென்ற மனப்பாங்கும் தான் அவசியம்.

Please follow and like us: