இலங்கை

சிங்கள இனவெறி தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் வாக்குறுதி நிறைவேறவில்லை.

இனவாதிகளின் கண்டி தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  (16) வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நஷ்டஈடுகள் வழங்கப்படுவதாக பிரதமர் அறிவித்திருந்த போதிலும் இதுவரை அதற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை என கண்டியில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் பலவும் தெரிவிக்கின்றன.

இனவாதக் கும்பல்கள் தமது தாக்குதல்களை முடித்துக் கொண்ட பின்னர் கடந்த 10 ஆம் திகதி பிரதமர் சேதங்களைப் பார்வையிடுவதற்காக கண்டிக்குச் சென்றிருந்தார். தாக்குதலில் சேதமடைந்த உடைமைகளின் விபரங்களை அடுத்த ஒருவாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்ட போது அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (16) க்கு முன்னர் தருவதாகக் கூறியுள்ளனர்.

இதன்படி உயிரிழந்தவர்களின் மூன்று குடும்பங்களுக்கும் கடந்த திங்கட்கிழமை (12) க்கு முன்னர் 100,000 ரூபா உடன் காசாகவும் வழங்குவதற்கு அவர் உத்தரவிட்டதோடு, உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச நஷ்டஈடு இதுவென்பதால், மேலும் 400,000 ரூபாவை அமைச்சரவை அங்கீகாரத்துக்கு விட்டபின்னர் கிடைக்கச் செய்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதன்படி உயிரிழந்த அப்துல் பாஸித் குடும்பத்தினருக்கான நிதி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அடுத்த இருவரில் லொறிச் சாரதியான குமாரசிங்கவுக்கும், தாக்குதலுக்கென வந்த போது பூஜாபிட்டியவில் குண்டு வெடித்து உயிரிழந்த நபருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு பிரமதர் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை சேதமடைந்த வீடொன்றுக்கு 50,000 ரூபாவும், வர்த்தக நிலையமொன்றுக்கு 100,000 ரூபாவும் பள்ளிவாசலுக்கு 500,000 ரூபாவும் ஆரம்பத் தொகையாக வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை வர்த்தக நிலையங்களும் வீடுகளுமாக 445 கட்டடங்களும், 24 பள்ளிவாசல்களும், 65 வாகனங்களும் சேதமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் இவர்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source – meelparvai.net

Please follow and like us: