இலங்கை

கண்டி சிங்கள இன வெறித்தாக்குதல் தரும் படிப்பினை

‘பெரும்பான்மை சிங்கள மக்கள் நல்லவர்கள், இனவாதிகள் சிங்கள மக்களில் வெகு சிலரே’ என்பது போன்ற முஸ்லிம் மைய நீரோட்ட கருதுகோள்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை கண்டி முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்கள் ஏற்படுத்தி இருக்கிறது.

அக்குறணை மீதான தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்கள் பலரும் இது வரைக்கும் முஸ்லிம்களுடன் ஒன்றாக கலந்து பழகியவர்கள் ; விசேட தினங்களில் முஸ்லிம்களுடன் கூடிக் களித்தவர்கள் ; நோன்பு காலத்தில் இறைச்சிக் கஞ்சியின் சுகத்தில் மெய் மறந்தவர்கள்.

புட்டுக் குழலுக்கு தேங்காய் பூவைப் போல ஊடுபாவியிருந்தவர்கள் திடீரென ஒரே இரவில் இனவாதிகளாக மாறிய ரசவாதத்தை புரிந்து கொள்வது கடினம் தான், ஆயினும் நாம் இதனை வெறுமனே சிங்களவர்களின் பொறாமையுணர்ச்சி என்று புரிந்து கொள்வது தவறு.

தாக்குதலின் பின்னணி காரணத்தை இனக் குறைப்பு செய்து புரிந்து கொள்வதன் மூலமாக நாம் சாதிக்கப் போவது எதுவும் இல்லை.

ஹிட்லரின் ஜெர்மனியில் யூதர்கள் மீதான தாக்குதல்களில், கொலை அழிப்புகள் ஈடுபட்டது வெறுமனே நாஸி ராணுவம் மற்றும் காவல்துறை மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஜெர்மன் மக்களும் யூதர்கள் மீதான குற்றச் செயல்களில் வன்மத்துடன் ஈடுபட்டனர் (ரொமன் போலன்ஸ்கியின் The Pianist திரைப்படத்தில் மறைந்து வாழும் யூத கதாநாயகனை (அட்ரியன் பிரோடி) இனங் கண்டு கொண்ட ஜெர்மன் பெண் ஒருத்தி ‘ Here is jew’ என்று கத்தும் பொழுது அந்தப் பெண்ணின் கண்களில் தெறிக்கும் வெறியையும் ரெளத்திரத்தையும் நினைவில் கொள்ளுங்கள்).

குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான கொலைக் களத்தில் பங்கு பெற்றது மோடியின் காவல்துறையும், அடியாட்களும் மட்டுமேயல்ல, குஜராத் இன அழிப்பு நடவடிக்கைகளில் அடித்தள மக்களின் பங்கு குறித்த விபரங்களை ஆய்வாளர்கள் வெளிக் கொணர்ந்து இருக்கிறார்கள்.

இதெல்லாம் சுட்டிக் காட்டுவது என்ன?

ஒரு மக்கள் திரளின் நம்பிக்கை, கலாச்சாரம், பண்பாடு, உணவு முறைகள், உடை வடிவமைப்பு போன்றவற்றை குற்றத் தன்மை – Criminalise – கொண்டதாக சித்தரித்து அதன் மூலமாக அந்த மக்கள் திரளின் இருப்பையே குற்றத் தன்மை கொண்டதாக ஏனையோர் உளவியலில் பதிப்பதே பாசிசம்.

அந்தலூஸியாவில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் ; ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகவும் ; குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இந்த பாசிஸத்தின் சமூக உளவியல் – Mass Psychology of Facism – தான் வேலை செய்தது.

இலங்கையிலும் அண்மைக்காலமாக பேரினவாதத்தின் எழுச்சியும் பொதுப் புலத்தை பாசிஸமயப்படுத்தும் இலக்கை நோக்கியே நடை போடுகிறது. கண்டியின் மீதான இனவாத தாக்குதல்கள் காட்டுவது இதனைத்தான் தான்.

நிலைமை இவ்வளவு சிக்கலாக இருக்கையில் ‘இனவாதிகள் வெறும் ஐந்து அல்லது ஆறு சதவீதம் உள்ளவர்கள்’ தான் என்று மிடில் கிளாஸ் புளிப்பு காட்டுவதில் எந்த விதமான பிரயோசனமும் இல்லை.

இறைதூதர் (ஸல்) அவர்களினதும் நேர்வழி நடந்த கலீபாக்களினதும் கால கட்டம் முடிந்ததன் பின்னரும் சிதிலமாக தொடங்கிய முஸ்லிம் வாழ்வமைப்பு இன்றைய நிலையில் முற்றாகவே இடிந்து வீழ்ந்துள்ளமையும் இந்த பிரச்சினைக்கு ஒரு காரணம்.

இலங்கையில் அல்லாமா சித்திலெப்பை, ஐ. எல். எம் அப்துல் அஸீஸ், ஏ. எம். எ அஸீஸ் போன்றவர்களின் வெகுவான உள்ளூர்த் தன்மை கொண்ட முஸ்லிம் சீர்திருத்த குரல்கள் தேய்வுற்று நலிவடைந்ததன் பின்னரான காலகட்டத்தில் இவர்கள் அளவுக்கு முஸ்லிம் உள்ளக சீர்திருத்தத்தை வலியுறுத்திய ஆளுமைகளின் இன்மை ஏற்படுத்திய வெற்றிடம் சமூகங்களுக்கு இடையிலான பிளவாக கூட மாறி இருப்பதை நாம் அவதானிக்கலாம்.

முஸ்லிம் சமூக சீர்திருத்தம், பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தை கொண்டு செல்லல் எனும் இரட்டை குதிரை சவாரி அவ்வளவு இலகுவான கருமம் அல்ல.

சோவியத் ரஷ்யா வீழ்ச்சிக்குப் பிறகான ஒற்றை துருவ உலக அரசியலையும், முதலாளித்துவம் அதன் நெருக்கடிகளை எந்த வகையில் கடக்க முற்படும் என்பதையும் திறனாய்வு செய்து இடதுசாரிகள், மதச்சார்பற்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து பணியாற்றி இனவாதத்தை வெல்ல வேண்டிய தருணம் இது.

எனக்கென்னவோ இதனை நாம் மகா கவி முஹம்மத் இக்பாலின் Reconstruction of religious thought in Islam மற்றும் குமாரி ஜயவர்த்தனாவின் From Nobody to Somebody போன்ற பிரதிகளில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது.

#இங்கிருந்து அறிவோம்

#பாதையை_செப்பனிடல்

By-Lafeer Saheed

Please follow and like us: