இலங்கை

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடந்த வன்செயல்கள் குறித்து விசாரணை நடத்தும் வகையில் மூன்று முன்னாள் நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைப்பது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

கண்டியில் நடந்த அக்கிரமங்களை இந்தக் குழு ஆராயும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டமை, உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட அழிவு, இதில் ஏதாவது சதி பின்னணியில் உள்ளதா, வன்செயல்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் எப்படியான நடவடிக்கைக்ளை எடுத்தார்கள் என்பவை குறித்து இந்தக் குழு ஆராயும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளது.

இப்படியான வன்செயல்க  ள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்தக்குழு பரிந்துரைகளை செய்யும்.

இதற்கிடையே கண்டிக்கு இன்று சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அங்கு இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களான மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து நிலைமை குறித்து ஆராய்ந்துள்ளார். முஸ்லிம் மற்றும் இந்து மதத் தலைவர்களையும் அவர் சந்தித்துள்ளார்.

மூன்று மதத் தலைவர்களும் ஒன்றாகக் கூடி பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று அவர்களை மஹிந்த ராஜபக்‌ஷ கோரியுள்ளார்.

ரணில் விஜயம்

இதற்கிடையே கண்டி மாவட்டத்துக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு மாவட்ட எம்பிக்கள் மற்றும் ஏனையோரை கச்சேரில் நடந்த கூட்டமொன்றில் சந்தித்துப் பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் உடனடியாக ஐம்பதினாயிரம் ரூபாயை முதற்கட்ட இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருக்கிறார். அந்தப் பணம் இரு தினங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

அதேவேளை, அங்கு வன்செயலின் போது போலிஸார் பாரபட்சமாக நடந்துகொண்டதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் புகார் செய்துள்ளனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இலங்கையின் கட்சித் தலைவர்கள் குழு ஒன்றும் கண்டி நிலைமைகளை ஆராய அங்கு சென்றுள்ளது.

(Source – bbc)

Please follow and like us: